AgaraMudhalvan
Epic Legend
கானல் நீர்
தூரத்தில் இருந்து கொண்டு நாம் நேசித்தவர்களின் மகிழ்ச்சியை பார்க்கும் போது.
நம்மை ஒரு மறு ஆய்வுக்கு உட்படுத்தி கொள்கிறது இதயம்.
ரசித்து உண்ணும் உணவில் ஏதோ ஓரிடத்தில் கசப்பு சுவை பட்டவுடன் நம் முகம் மாறுவது போல.
இத்தனை நாட்களாய் அவர்களின் மகிழ்ச்சியை நாம் சிறைப்பிடித்து கொண்டோமோ என்பதாய் ஒரு துக்கம் அடைத்துக் கொள்கிறது.
நாம் தான் அவர்களுக்கு எல்லாமுமாய் இருந்திருக்கிறோம் என்று நினைத்திருந்த நாட்களை எண்ணி வெட்கப்பட்டு கொள்கிறது இதயம்.
நம்மை தாண்டி இன்னும் அவர்களுக்கு இந்த உலகில் நிறைய இருந்திருக்கிறது என்பதை அறிந்து தலைகுனிந்து கிடக்கிறது அது.
நமக்காய் அவர்கள் நின்றதும்..
அவர்களுக்காய் நாம் நின்றதும்..
ஒரு காணல் நீரின் தோற்றம் தான் என்பதை உள்வாங்க இதயம் மறுக்கிறது .
நிரப்பமுடியாத இடத்தில் நாம் இருக்கிறோம் என்றும்.
பிரிக்க முடியாத இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்றும்.
பதித்து வைத்திருந்த சுவடுகளை இதயம் மெதுவாய் சுரண்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.
இங்கு நம்மை நிரப்புவதற்கும்...
நம்மை போல நிற்பதற்கும்.
நம் தேவைதான் அவர்களுக்கு இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்துக் கொள்கிறது இதயம்.
இவைகளெல்லாம் உணர்ந்த பின் உண்மையாய் நேசித்த இதயம் மெதுவாய் செயலிக்க தொடங்குகிறது.
இப்பொழுது உடைந்த அந்த இதயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையாகிறது. சிகிச்சை முடிந்த சிலகாலம் மவுனம் என்ற மருந்தோடு பழகி போகிறது.
பின்பு ஏதோ ஒருநாளில் மீண்டும் சீராய் துடிக்க தொடங்குகிறது.
இப்பொழுது அது தன்னை அடுத்த காயத்திற்கு தயாராக்கி கொள்கிறது.